மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.

ஜனவரி 17ஆம் நாள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புகழுடைய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்நாளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகத்தின் இனிமையான நினைவுகளை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார் கலைவாணரின் புதல்வர் என்.எஸ்.கே.நல்லதம்பி.

மக்கள் திலகத்திற்கு கலைவாணருக்கும் இடையே நெருங்கிய உறவு தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்தது. 1935 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தான் தமிழில் வெளிவந்த படங்கள் தயாராகின. அதில் பலவற்றை இயக்கியவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.

நாடக நடிகர்கள் தான் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நடிகர்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தனர். நடிகர்களுக்கான வீடுகள் ஸ்டூடியோ வளாகத்திலேயே இருந்தன. கலைவாணர், பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். போன்ற கலைஞர்கள் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றனர்.

கலைவாணர் மீது ஈர்ப்பும் பாசமும் மக்கள் திலகத்திற்கு அந்த காலகட்டத்திலேயே உருவாகியது என்று குறிப்பிடலாம். கலைவாணரும் மதுரம் அம்மாவும் தங்களுடைய நகைச்சுவை நடிப்பாலும், சிந்தனைக்குரிய கருத்துக்களாலும், பாடல்களாலும் புகழ்பெறத் தொடங்கிய காலகட்டம் அது.

தன்னுடைய நண்பர், ஆலோசகர், வழிகாட்டி என்ற வகையில் மக்கள் திலகம் கலைவாணரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். “எனக்குப் பிரச்சனை வரும்போதெல்லாம் நான் தேடிச் சென்று ஆலோசனை பெற்றது கலைவாணர் இடம் தான்!” என்று மக்கள் திலகம் கூறியுள்ளார்.

கலைவாணரும் எம்.ஜி.ஆரால் பெரிதும் கவரப்பட்டார். கலைத்துறைக்கு அப்பாற்பட்டு இருவருக்குமிடையே இருந்த புரிதல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.

கலைவாணர் சினிமாவில் கூறும் கருத்துக்களும் பாடல் வரிகள் மற்றும் காட்சி அமைப்புகளும் மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதைக் கூர்ந்து கவனித்த மக்கள் திலகம், “வெற்றி பெற்ற இந்த அணுகுமுறையைத் தம் வாழ்நாள் முழுவதும் திரைப்படங்களிலும் பொது வாழ்விலும் கடைப்பிடிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நடிகர்களாகிய நமக்கு வரும் பணம் என்பது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்து வருவது. அது திரும்பவும் மக்களுக்கே சென்றடைய வேண்டும்” என்பது கலைவாணரின் கருத்து. அவர் கடைபிடித்த இந்தக் கொள்கை தன்னை வழிநடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

1957 ஆம் ஆண்டில் கலைவாணர் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் எங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட புரட்சித் தலைவர் எங்களுடைய கல்வி, திருமணம் என்று எல்லா நிலைகளிலும் இன்றியமையாத பங்காற்றினார்.

நான் பள்ளிப் படிப்பு முடித்து மைசூர் மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் பொரியியல் படிப்பதற்கு தேவையான கேபிடேஷன் பீஸ் ரூபாய் 3000 கட்டி என்னுடைய பொறியியல் கனவை நனவாக்கினார் பொன்மனச்செம்மல்.

1967 – ல்  அவர் கொடுத்து உதவிய அந்தத் தொகை, தற்போது பல லட்சங்களுக்கு சமமாகும். அழியாத கல்விச் செல்வத்தை எனக்கு தந்தவர் வள்ளல் எம்.ஜி.ஆர்.

“செல்வம் நிலையானதல்ல. ஆனால், கல்வி நிலையானது!” என்று நான் கல்லூரிக்குச் செல்லும்போது வாழ்த்தியது இன்றளவும் மறக்க முடியாதது. எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் திலகம் காட்டிய பரிவு, பாசம் என்பது, காலம் கலைவாணர் குடும்பத்துக்கு அளித்த கொடை என்றே தோன்றுகிறது.

1976-ல் எனது திருமணமும் மக்கள் திலகத்தாலேயே நடத்தி வைக்கப்பட்டது. அப்போது  வாழ்த்திப் பேசியபோது அவர் குறிப்பிட்டார், “மணமக்களாகிய உங்களை ‘அவர்களைப் போல இருங்கள்… இவர்களைப் போல இருங்கள்’ என்று வாழ்த்துவதை விட, நல்ல மனிதர்களாக வாழுங்கள் என்று வாழ்த்தவே விரும்புகிறேன். அதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான பாதையாகும்!” என்றார். அவருடைய வாழ்த்துரை என்றும் என் மனதில் உள்ளது.

நாகர்கோவிலில் கலைவாணர் கட்டிய மதுர வனம் இல்லம், 1959-ல் ஏலத்துக்கு வந்தது. அந்த வீட்டிற்கான பணத்தைக் கட்டி, வீட்டை எங்கள் குடும்பத்திற்கு மீட்டுத் தந்த வள்ளல் பொன்மனச்செம்மல்.

சென்னை வாலாஜா சாலையில் இருந்த பாலர் அரங்கம் கட்டடம் 1971-ல் புதுப்பிக்கப்பட்டது. அதில் முதல் நிகழ்ச்சியாக என்னுடைய சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்தார் புரட்சித் தலைவர். திருமணத்தில் அவர் பேசும்போது, “இந்த அரங்கம் கலைவாணர் பெயர் தாங்கி பெருமை சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களால் அப்போதே ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயரிடப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, தற்போது புதுப்பொலிவுடன் திகழும் கலைவாணர் அரங்கம், காலம் முழுவதும் என் தந்தையாரின் பெயர் தாங்கி நினைவுச் சின்னமாகத் திகழ்வது எங்கள் குடும்பத்திற்கு பெருமை தரக்கூடியதாகும்.

மேலும் பெருமை தரக் கூடிய செயல், கலைவாணர் பிறந்த நாகர்கோவிலில் 1967-ல் மக்கள் திலகம் தன்னுடைய சொந்தச் செலவில் கலைவாணரின் முழு உருவச் சிலையை நிறுவியது புரட்சித் தலைவரின் பேருள்ளத்தைக் காட்டுகிறது.

ஏழைப்பங்காளனாக, வள்ளலாக, கருணையுள்ளம் கொண்டவரான பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் இடம் பெற்றிருக்கும்.

27.01.2021 தேதியிட்ட குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரை.

You might also like